சென்னை: தமிழகத்தில் இணையக் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 38,203 பேர் ஏமாந்து போய் உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.514 கோடி பறிக்கப்பட்டு மோசடி நடந்து இருப்பதாக தமிழக காவல் துறைத் தலைவர் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இணையம் மூலம் பண மோசடி, பாலியல் ரீதியான தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நிகழ்வதாகவும் அவற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் கடந்த மே 31ஆம் தேதி வரையிலான ஐந்து மாதங்களில் இணையம் வழியிலான குற்றங்கள் தொடர்பாக 41,918 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக டி.ஜி.பி தெரிவித்துள்ளார். அவற்றின் மூலம் ஏற்பட்ட நிதி இழப்பு தொடர்பாக 38,200 பேர் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.
“நிதி சாரா சைபர் குற்றங்கள் தொடர்பாக 11,709 பேர் புகார் அளித்துள்ளனர். மேலும் பாலியல் தொல்லை தொடர்பாக 2,147 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மோசடிகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.106 கோடி முடக்கப்பட்டுள்ளது.
“மேலும் ரூ.13 கோடி ரொக்கமாக மீட்கப்பட்டு ஏமாற்றப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் குற்றவாளிகள் பணத்தை எடுக்கவிடாமல் நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்றும் டிஜிபி கூறினார். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.