சூடுபிடிக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளராக மருத்துவர் அபிநயா

சூடுபிடிக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளராக மருத்துவர் அபிநயா

2 mins read
ccaf8471-103b-43d6-8008-24b7374285b4
விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் அபிநயா கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். - படம்: ஊடகம்

சென்னை: விக்கிரவாண்டி இடைத் தேர்தல் கட்சிகளிடையே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி அறிவித்ததும் முதல் கட்சியாக திமுக தனது வேட்பாளரை அறிவித்தது. அக்கட்சி சார்பில் திமுக விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி மாநில அங்கீகாரம் பெற்ற நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டித் தொகுதியில் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்திலே போட்டியிட முனைப்பு காட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது.

மேலும் அந்தத் தொகுதிக்கான வேட்பாளராக மருத்துவர் அபிநயா என்பவரை அறிவித்துள்ளார் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தன. இதில், திமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தோல்வி அடைந்தது. இருந்தும் 8.19 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற தகுதியை நாம் தமிழர் கட்சி பெற்றது.

இதற்கிடையே நாம் தமிழர் கட்சி மாநில அங்கீகாரம் பெற்ற நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களது விருப்பச் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்திலே போட்டியிடவும் முனைப்பு காட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது.

அதிமுகவின் வேட்பாளர் தேர்வு இழுபறியாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது போட்டியிடும் வேட்பாளர் இறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்ச் செல்வனே வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க. போட்டியிடும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அந்தத் தொகுதியில் வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்று பா.ம.க. ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பா.ம.க.வின் முன்னாள் மாவட்டச் செயலாளரான புகழேந்தி, கடந்த முறை தனித்துப் போட்டியிட்டு 41 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற வன்னியர் சங்க நிர்வாகி அன்புமணி, மாநில நிர்வாகி பழனிவேல் உள்ளிட்டவர்களின் பெயர்கள் வேட்பாளர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இவர்களில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகலையான புகழேந்திக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்