பாபநாசம்: தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், பண்டாரவாடை அருகில் உள்ள கோயில் தேவராயன்பேட்டையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மச்சபுரீஸ்வரர் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலின் அருகில் வீடு கட்டுவதற்காக கட்டுமானப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை காலையில் குழி தோண்டினர்.
அப்போது, சுமார் 10 அடிக்கு மேல் தோண்டப்பட்ட குழியில் இருந்து சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து கட்டடப் பணியாளர்கள் இடத்தின் உரிமையாளரிடம் விஷயத்தைச் சொல்லி இருக்கிறார்கள். இதையடுத்து அவர், உடனடியாக பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டனுக்கு தகவல் அளித்துள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட சிலைகள் குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பின்னரே சிலைகள் குறித்த முழு விவரமும் தெரியும் என வட்டாட்சியர் மணிகண்டன் தெரிவித்தார்.

