பள்ளியில் புகுந்து பயமுறுத்திய சிறுத்தை: 11 மணி நேர போராட்டத்திற்குப் பின் சிக்கியது

பள்ளியில் புகுந்து பயமுறுத்திய சிறுத்தை: 11 மணி நேர போராட்டத்திற்குப் பின் சிக்கியது

2 mins read
80913efd-494e-4603-b9be-e44d924dbcf6
மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்கப்பட்டது. - படம்: தமிழக ஊடகம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலேயே உள்ள மேரி இமாகுலேட் பள்ளி வளாகத்தினுள் வெள்ளிக்கிழமை (14 ஜூன்)மாலை சிறுத்தை ஒன்று புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளி சுற்றுச் சுவா் பகுதியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த புத்தாகரம் பகுதியைச் சோ்ந்த கோபால், 60, என்பவரை சிறுத்தை கடித்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னா், பள்ளி வளாகத்தைக் கடந்து அருகில் உள்ள சுவரில் ஏறி, ஒரு வீட்டின் காா் நிறுத்துமிடத்தில் சிறுத்தை பதுங்கியது. அதனைத் தொடர்ந்து, கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்கும் பணி தொடங்கியது.

வனப்பகுதிகளே சுற்றிலும் இல்லாத நகர்ப் பகுதியில் சிறுத்தை எவ்வாறு வந்தது என்பது பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சிறுத்தை புகுந்த கார் நிறுத்துமிடத்தில் இரண்டு கார்களில் ஐந்து பேர் சிக்கி இருந்தனர். சிறுத்தையின் அச்சுறுத்தலால் 5 மணி நேரத்திற்கு மேலாக காருக்குள்ளேயே இருந்த அவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

இதனையடுத்து, பலமணிநேர போராட்டத்திற்குப் பின் வனத்துறை உதவியுடன் வெள்ளிக்கிழமை இரவு ஐந்து பேரும் மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க அங்கு அதிகப்படியான வனத்துறை அதிகாரிகள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், வனத்துறையினர் சிறுத்தைக்கு மயக்க ஊசியை செலுத்திய நிலையில், 11 மணி நேரத்திற்குப் பின் சிறுத்தை பிடிபட்டது. இதனால் பொதுமக்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்