நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்தது; இரு மீனவர்கள் மரணம்

நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்தது; இரு மீனவர்கள் மரணம்

2 mins read
5d474110-48ec-4d41-9606-70cdb6fd48f5
கப்பல் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் பரக்கத்துல்லா, ஆரோக்கியம். - படங்கள்: தமிழக ஊடகம்

பாம்பன்: மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெற்றதையடுத்து 61 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை (ஜூன் 15) விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குச் சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சேதுநகர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சனிக்கிழமை காலை 5 மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

6 நாட்டிக்கல் மைல் தூரத்தில் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென அவர்களது விசைப்படகில் பழுது ஏற்பட்டு கடலில் மூழ்கியுள்ளது.

இதில் கடலில் தத்தளித்த பாம்பன் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், மண்டபம் பகுதியைச் சேர்ந்த முகமது ஹனிபா ஆகியோரை அவ்வழியாக மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

இருப்பினும், இவர்களுடன் கடலுக்குச் சென்ற பரக்கத்துல்லா, கலீல் ரகுமான், ஆரோக்கியம் ஆகிய மூன்று பேர் கடலில் மூழ்கினர். இதில் பரக்கத்துல்லா, ஆரோக்கியம் ஆகிய இருவரும் கடலில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக மீனவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

மாயமான கலீல் ரகுமானைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்ததும் உயிரிழந்த மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கரையில் காத்திருந்தனர். தகவல் அறிந்த கடலோரக் காவற்படையினர் மீனவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மீன்பிடித் தடைக்காலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் உயிரிழந்ததால் அந்தப் பகுதியில் சோகம் சூழ்ந்துள்ளது.

மீன்பிடித் தடைக்காலத்தில், விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நாள்களில் மீனவா்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனா்.

குறிப்புச் சொற்கள்