திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதியில் பொதுப் பாதையை மறித்து, நீரோடை ஒன்றை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
‘பாரதிய கிஷான்’ என்ற அமைப்பின் மாநிலச் செயலாளர் அசோகன் என்பவர் இப்புகாரை அளித்துள்ளார்.
கொடைக்கானல், பேத்துப்பாறையில் உள்ள அருவிக்கு அருகே பிராஷ்ராஜூக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு உரிய அனுமதியின்றி வீடு கட்டியதாக கடந்த ஆண்டிலேயே அப்பகுதி விவசாயிகள் வருவாய்த்துறை ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் புகார் அளித்துள்ளதை அடுத்து விசாரணை நடைபெற்றது.
அப்போது உரிய அனுமதியின்றி பிரகாஷ்ராஜ் வீடு கட்டியிருப்பது தெரியவந்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்நிலையில், தனது வீட்டுக்கு அருகே உள்ள நீரோடையை பிரகாஷ்ராஜ் ஆக்கிரமித்துள்ளதாக மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது.
அவரது வீடு சதுப்பு நிலத்தில் அமைந்துள்ளதாகவும் விவசாயிகள் சென்று வரும் பொதுப்பாதையில் சூரிய சக்தி மின்வேலி அமைத்து பாதையை மறித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சதுப்பு நிலத்தில் 600 சதுர அடி அளவிலான வீடுகளை மட்டுமே கட்ட முடியும். ஆனால் அதை கவனத்தில் கொள்ளாமல் 2000 சதுர அடிக்கு அவர் வீடுகட்டி உள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

