சென்னை: கடந்த ஆறு மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 42,486 பேருக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டதாக அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
காச நோயை முழுமையாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
2025ஆம் ஆண்டுக்குள் இந்த நடவடிக்கை முழுமை அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காச நோயாளிகளைக் கண்டறிவது, கூட்டு மருந்து சிகிச்சை அளிப்பது, தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என காசநோய் ஒழிப்பு திட்டப் பணிகள் மாநிலம் முழுவதும் விரிவாக மேற்கொள்ளப்படுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள காச நோயாளிகளுக்குத் தேவைப்படும் அனைத்து மருந்துகளும் களப்பணியாளர்கள் மூலம் அவர்கள் வசிப்பிடங்களுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது.
அரசு மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, காசநோயாளிகளில் சுமார் 78 விழுக்காட்டினர் முதற்கட்ட சிகிச்சையிலேயே குணமாகி விடுகின்றனர் என்றும் மீதமுள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை மூலம் அந்நோய் குணமாகிறது என்றும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பாண்டில் நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இருந்து பெற்றுள்ள தகவல்களை மத்திய அரசு ஆய்வு செய்த போது நாட்டில் 11.83 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு காசநோய் தாக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,486ஆக உள்ளது. அவர்களில் 13,913 பேர் தனியார் மருத்துவமனையிலும் 28,573 பேர் அரசு மருத்துவமனையிலும் முதற்கட்ட சிகிச்சை பெற்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 விழுக்காடு அளவு குறைந்துள்ளது.
இந்நிலையில் காசநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை குறைப்பதுடன், தமழகத்தில் அந்நோய் பாதிப்பு இல்லாத மாநிலமாக உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.