விமான நிலையத்துக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்

விமான நிலையத்துக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்

1 mins read
69527e70-c3f0-4005-9836-bbd1e3db6982
சென்னை விமான நிலையம். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: இரண்டு வாரங்களில் ஐந்து முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நீடித்து வருகிறது.

திங்கட்கிழமையான நேற்று விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு அதிகாலையில் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளின்படி முதலில் வெடிகுண்டுகள் கண்டறியும் குழுவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என உறுதியானது. எனினும், வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், விமானங்களில் சரக்குகளை ஏற்றும் பகுதி ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கூடுதல் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல்

வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த தொலைபேசி அழைப்பில் ஒருவர் இந்த மிரட்டலை விடுத்தார்.

இந்த மிரட்டலையடுத்து காவல்துறையினர் நெல்லை ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். விசாரணையின்போது, அந்த மிரட்டல் வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே, இந்த மிரட்டலை விடுத்தது திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 42 வயதான சிவபெருமான் என்பது உறுதியானது. இதையடுத்து அவர் கைதானார்.

குறிப்புச் சொற்கள்