சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவு செய்த உடனேயே தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய நடைமுறைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பத்திரப்பதிவுத் துறையும் வருவாய்த்துறையும் இணைந்து ஜூன் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ள இப்புதிய வசதி மூலம் உட்பிரிவு செய்யும் தேவை இல்லாத நில கிரையங்களில் தானியங்கி முறையில் சில மணி நேரத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யலாம்.
ஒரு நிலத்தையோ, வீட்டையோ அல்லது வேறு சொத்தையோ வாங்குபவர் அதன் பரப்பளவில் மாற்றங்கள் ஏதும் இல்லாத பட்சத்தில் உடனடியாக அவரது பெயர் பட்டா மாறுதல் இணையத்தளத்தில் புதுப்பிக்கப்படும்.
மாவட்டம், தாலுகா, நகரம்/கிராமம், சர்வே நம்பர், உட்பிரிவு போன்ற உள்ளீடுகளைப் பயன்படுத்தி சில நிமிடங்களில் ஆன்லைன் பட்டாவை https://eservices.tn.gov.in என்ற அரசு இணையத்தளத்தில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
சொத்தைப் பதிவு செய்தவுடன், புதிய உரிமையாளரின் பெயர் உடனடியாக பட்டா சான்றிதழில் தோன்றும் என்றும் அதனை https://tnreginet.gov.in/portal/ என்ற இணையப்பக்கத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பிருந்த நடைமுறையின்படி, இந்த பட்டா பெயர் மாற்றத்துக்கு அதிக காலமானது. மேலும், சில சிக்கல்களும் சுட்டிக்காட்டப்பட்டன.
அனைத்துவிதமான கருத்துகளை கேட்டறிந்த பின்னர், அரசு இந்தப் புதிய வசதியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.