சென்னை: பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் முன்னேற்றத்துக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஆனால், இந்த நீட் தேர்வு ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான வாய்ப்பை தடுக்கும் கருவியாகவே உள்ளது.
அனிதா தொடங்கி இன்னும் எத்தனையோ மாணவர்கள் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களை நாம் பார்த்துவருகிறோம்
இந்த நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானதாகவே உள்ளது. எனவே, இதுபோன்ற தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்வு முகமையை தற்காக்கும் விதமாக மத்திய கல்வி அமைச்சர் செயல்பட்டாலும், அண்மைய நிகழ்வுகள் வித்தியாசமாக உள்ளன. நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகளைப் பெற்றுக்கொண்டு ஓஎம்ஆர் தாள்களை கண்காணிப்பாளர்கள் சேதப்படுத்தியதாக குஜராத் காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
ஒரு பள்ளி முதல்வர், ஒரு இயற்பியல் ஆசிரியர் மற்றும் பல நீட் பயிற்சி மையங்கள் சம்பந்தப்பட்ட இந்த சதி, நீட் தேர்வு விவகாரத்தில் முறையான மாற்றத்துக்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நீட் விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் நீட் தேர்வில் உள்ள சமத்துவமின்மையை எடுத்துக்காட்டுகிறது.
நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாக்கசிவு, கருணை மதிப்பெண்கள், முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் 720 மதிப்பெண்ணுக்கு 720 மதிப்பெண் எடுத்தார்கள்.
இவர்களில் 6 பேர் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என தெரிய வந்ததும் பெரிய விவாதத்தை எழுப்பியது.
தொடர்புடைய செய்திகள்
குஜராத்தில் நீட் தேர்வு முறைகேட்டில் 5 பேர் கைதாகியுள்ளதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. தேர்வு எழுதிய மாணவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு 67 பேர் நீட் தேர்வில் 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த முறைகேட்டைக் கண்டித்து மாணவர்களும் அரசியல் கட்சிகளும் நாடு முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் தேர்வு குளறுபடி வழக்கு விசாரணையில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்று இந்தியாவின் தேசிய தேர்வு முகமை கடந்த 13.6.24ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன்படி ஜூன் 23ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 30ஆம் தேதிக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.