குற்றச்செயல்களைத் தடுக்க பருந்து செயலி: காவல்துறை

2 mins read
e2b1b8e4-6e15-476e-a03e-2eb7b884f50d
தமிழகத்தில் 16,502 ரவுடிகள் உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் கூறியுள்ளார். - படம்: ஊடகம்

சென்னை: தலைநகர் சென்னையில் குற்றச்செயல்களைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் குற்ற வழக்குகள், குற்றம் புரிந்தவர்களின் அண்மைய விவரங்கள் ஆகியவற்றைக் கொண்டு ரவுடிகளைக் கண்காணிக்க ஏதுவாக ‘பருந்து’ என்ற செயலியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது சென்னை காவல்துறை.

கடந்த 2020ஆம் ஆண்டில் தமிழகத்தில் 64 ஆணவக்கொலைகள் நிகழ்ந்துள்ளன. 2021ல் இந்த எண்ணிக்கை 89ஆகவும் 2022ல் 93 கொலைகளும் நிகழ்ந்துள்ளன.

மாநிலம் முழுவதும் இம்மூன்று ஆண்டுகளில் 1,597 கொலைகள் நடைபெற்றுள்ளன.

மேலும் கூட்டுக்கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் உட்பட 26 வகையான குற்றங்கள் தொடர்பில் லட்சக்கணக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் குற்றச்செயல்களைத் தடுக்க அனைத்து வகையான புள்ளி விவரங்களும் காவல்துறையால் சேகரிக்கப்பட்டு வருவதாக இந்து தமிழ் ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழகத்தில் 16,502 ரவுடிகள் இருந்தனர் என்றும் தலைநகர் சென்னையில் மட்டும் 3,175 ரவுடிகளும் இருந்ததாக காவல்துறை கூறுகிறது.

இந்த ரவுடிகளை ஒழிக்க மூன்று வகையான பிரிவுகள் உள்ளன. பொது மக்களுக்குக் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் ரவுடிகள் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

இத்தகைய சூழலில் ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளி கள், பிணையில் வெளிவந்த கொலைக்குற்றவாளிகளைக் கண்காணிக்க ‘பருந்து’ செயலியை காவல்துறை விரிவாகப் பயன்படுத்த உள்ளது.

முதல்கட்டமாக, சென்னையில் கடந்த ஜனவரி மாதம் இச்செயலி அறிமுகமானது.

காவல் நிலையங்களில் உள்ள ரவுடி பட்டியலில் இடம்பெற்றவர்கள், அவர்களின் தற்போதைய நிலை, குற்றச்செயல்கள் விவரம், அந்த ரவுடிகள் மீதுள்ள வழக்கு விவரங்கள், எதிரிகள் ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, அவரது முகவரி மாறியுள்ளதா என்பது பலமுறை சோதிக்கப்படுகிறது. பின்னர் இந்த தகவல்கள், உரிய புள்ளி விவரங்கள் ஆகியவை ‘பருந்து’ செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.

பின்னர் இதை வைத்து ரவுடிகளின் நடமாட்டத்தை அதிகாரிகளால் எளிதில் கண்காணிக்க முடிகிறது.

சென்னையை அடுத்து, மாநிலம் முழுவதும் இந்த செயலியை அறிமுகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்