தமிழகத்தில் இனி குடிநீர் தரத்தை மாதந்தோறும் பரிசோதிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு

தமிழகத்தில் இனி குடிநீர் தரத்தை மாதந்தோறும் பரிசோதிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவு

1 mins read
48e166ab-a731-491f-8ae0-b1729f4d6c47
பொது மக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் குடிநீர் தரத்தை மாதந்தோறும் பரிசோதிக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் குறித்து சில தரப்பினர் சந்தேகங்கள் எழுப்பி உள்ளனர்.

இதையடுத்து, சுகாதார ஆய்வாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அத்துறை உத்தரவிட்டுள்ளது.

சில ஊரகப் பகுதிகளில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு கடந்த 20 நாள்களில் மட்டும் 9 பேர் உயிரிழந்துவிட்டதாக இந்து ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மாதம்தோறும் வீடுகளுக்கு வரும் குடிநீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறைகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் செல்வ விநாயகம் கூறியுள்ளார்.

அதே சமயம் பொது மக்கள் குடிநீரை நன்றாகக் காய்ச்சி, அதன் பிறகே குடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்