ஆந்திர எம்.பி. மகள் ஓட்டிச் சென்ற கார் ஏறி நடைபாதையில் தூங்கிய இளையர் பலி

ஆந்திர எம்.பி. மகள் ஓட்டிச் சென்ற கார் ஏறி நடைபாதையில் தூங்கிய இளையர் பலி

2 mins read
b7a29444-afe3-4bd3-aa7a-197643a512c6
கொல்லப்பட்ட சூர்யா, ஆந்திர மாநில எம்பி மகள் பீடா மாதிரி. - படம்: ஊடகம்

சென்னை: பெற்றோருடன் கோபித்துக்கொண்டு மன வருத்தத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய சூர்யா என்ற சாயம் பூசுபவர் மதுபோதையுடன் பெசன்ட் நகர் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தார். அவர் மீது கார் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய ஆந்திர மாநில எம்பியின் மகள் பீடா மாதிரியைக் காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள பெசன்ட் நகர் ஓடைக் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா, 22.

சாயம் பூசுபவரான இவர், மதுபோதையுடன் பெசன்ட் நகர் நடைபாதையில் படுத்துத் தூங்கியுள்ளார்.

சற்று நேரத்தில், நடைபாதையில் இருந்து உருண்டு, சாலையில் விழுந்தவர்மீது அவ்வழியாக வந்த கார் ஒன்று ஏறி இறங்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

காரில் வந்த பெண்கள் இருவரும் விபத்தை ஏற்படுத்திவிட்டு காரை நிறுத்தாமல் தப்பிச் சென்றனர்.

பொதுமக்கள் சூர்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி சூர்யா உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவலர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய காவலர்கள் இதுகுறித்து நடத்திய விசாரணையில், பெசன்ட் நகரைச் சேர்ந்த பீடா மாதுரி, 32, என்பவர் காரை ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர் ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா எம்பி பீடா மஸ்தான் ராவின் மகள் எனத் தெரியவந்தது.

பெசன்ட் நகரில் வசித்து வரும் பீடா மாதிரி புதுச்சேரியில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, காரில் வந்த மற்றொரு பெண் குறித்து காவலர்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்