சென்னை: சாதிய வன்முறைகளை ஒழிக்க உடனடியாகச் செய்யவேண்டியவை, நீண்டகால செயல்திட்டங்கள் என இரண்டுவிதமான பரிந்துரைகளை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒருநபர் குழு வழங்கியுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவானது முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
அதில் பள்ளிகளில் சாதி வன்முறைகளை ஒழிக்க எடுக்கவேண்டிய நீண்டகால நடவடிக்கைகள், குறுகிய கால நடவடிக்கைகள் என இரண்டுவகையாகப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, அரசுப் பள்ளிகளில் உள்ள சாதிய அடையாளங்களை முழுவதுமாக நீக்கவேண்டும். சாதிய அடையாளங்களே இருக்காது என்ற உறுதிமொழியைப் பெற்றபிறகே புதிய பள்ளிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கையில் வண்ணக்கயிறுகள், நெற்றித் திலகம் உள்ளிட்டவற்றுக்குத் தடைவிதிக்க வேண்டும்.
மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதிப் பெயர் இடம்பெறக் கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும்.
பள்ளிகளுக்கு நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது அதில் சாதிப் பெயரைக் குறிப்பிடக் கூடாது. தனியார் பள்ளிகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளும் 200 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

