வீட்டைக் காலிசெய்ய மாடிப்படிகளை இடித்த உரிமையாளர்

வீட்டைக் காலிசெய்ய மாடிப்படிகளை இடித்த உரிமையாளர்

2 mins read
3dbd9940-fbf2-4d78-abd4-299f0dca36fe
மேல் மாடியின் படிக்கட்டுகள் இடிக்கப்பட்டன. - படம்: ஊடகம்
multi-img1 of 2

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வானவில் நகர்ப் பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தினர் வீட்டு வாடகையை முறையாகச் செலுத்தாமல் நீண்ட நாள்களாக இழுத்தடித்து வந்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் மாடிப்படிகளை இடித்ததால் மேல்மாடியில் தங்கியிருந்த குடும்பத்தினர் கீழே வரமுடியாமல் பல மணி நேரமாக வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை நேரிட்டது.

இதனைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அவசர எண் 100க்குத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்ததும் தீயணைப்புத் துறையினரும் காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினரும் இணைந்து அவர்களை மீட்டனர்.

காஞ்சிபுரத்தில் அச்சு நிறுவனத்தை நடத்தி வரும் சீனிவாசன் என்பவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சொந்த வீடு இருந்துள்ளது.

இந்த வீட்டின் மேல் மாடியில் வசித்த வேணுகோபால் என்பவர், தனது மனைவி லீலா, தம்பி பாபு, மகள் மகாலட்சுமி, அவருடைய இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

வேணுகோபால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில், பாபு முறைப்படி வாடகை செலுத்தாமல் மாதக் கணக்கில் தங்கியிருந்ததால் அவரைத் தனது வீட்டில் இருந்து காலி செய்யும்படி சீனிவாசன் கூறியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து பாபு வழக்கறிஞரின் உதவியுடன் வீட்டு உரிமையாளரிடம் பேசி, கால அவகாசம் கேட்டு, கடந்த ஆறு மாத காலமாக வாடகையைச் செலுத்தாமல் தங்கி இருந்துள்ளார்.

அதன்பின்னரும் வீட்டைக் காலி செய்யும்படி பலமுறை கூறியும் வீட்டைக் காலி செய்ய பாபு மறுத்துவிட்ட நிலையில், கட்டுமானப் பணியாளர்கள் 10 பேருடன் அங்கு வந்த சீனிவாசன், தனது வீட்டின் மேல் மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகளை இடித்து, வேணுகோபால் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற முடியாதவாறு இணைப்பைத் துண்டித்திருக்கிறார்.

இதையடுத்து கீழே இறங்கமுடியாமல் தவித்தவர்களை காஞ்சிபுரம் தீயணைப்புத்துறையினரும் காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினரும் இணைந்து மீட்டனர்.

குறிப்புச் சொற்கள்