சென்னை: காற்றாலை மின் நிலையங்களை அதிகளவில் அமைத்ததற்காக தமிழகத்துக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.
இவ்விருதை மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக்கிடம் இருந்து தமிழக மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி பெற்றுக்கொண்டார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி பல்வேறு தனியார் நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக 10,603 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை அமைத்திருந்தன.
இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சொந்த தேவைக்குப் பயன்படுத்தியது போக எஞ்சியதை மின்வாரியத்துக்கு விற்பனை செய்கின்றன.
மத்திய அரசின் புதிய, புதுப்பிக்கத்தக்க மின்துறை சார்பில், டெல்லியில் அண்மையில் உலக காற்று தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், 2023-24ஆம் நிதியாண்டில் இந்தியாவில் காற்றாலை மின்நிலையம் அமைக்கப்பட்டதில் தமிழகம் 3வது இடத்தைப் பிடித்ததற்காக விருது வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டில் தமிழகத்தில் 586 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இதே காலகட்டத்தில் குஜராத் மாநிலத்தில் 1,600 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு முதலிடத்தையும் கர்நாடகா 700 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை அமைத்து இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.