சிபிசிஐடி விசாரணை தொடங்கியது; குளிர் சாதனப் பெட்டிகளுக்குத் தட்டுப்பாடு

சிபிசிஐடி விசாரணை தொடங்கியது; குளிர் சாதனப் பெட்டிகளுக்குத் தட்டுப்பாடு

2 mins read
ஒரே கிராமத்தில் கள்ளச்சாராயத்தால் 29 பேர் பலி; திரும்பிய பக்கமெல்லாம் பந்தல், அழுகுரல்
d22663cd-113b-44fa-bc57-000cf618ca95
கருணாபுரம் பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய உறவினர்கள். - படம்: இந்து ஊடகம்
multi-img1 of 2

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் மூன்று பெண்களும் அடங்குவர்.

இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. கருணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 29 பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்திருப்பதால் சிறுவங்கூர் சாலை, காட்டு நாயக்கன்தெரு உள்ளிட்ட பகுதிகளில் திரும்பிய பக்கமெல்லாம் பந்தல்கள் போடப்பட்டு அழுகுரலாக இருந்து வருகிறது.

இறந்தவர்களின் உடலை வைக்கும் குளிர்சாதனப் பெட்டிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் உடலை திறந்தவெளியில் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இறந்தவர்கள் அனைவரது உடலையும் ஒரே இடத்தில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. இறுதிச் சடங்குகளை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட 29 அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளச்சாராயம் சம்பவம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதியை தமிழக அரசு நியமித்துள்ளது.

சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்ற கன்னுக்குட்டி, அவரது மனைவி விஜயா, அவரது தம்பி தாமோதரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 200 லிட்டர் கள்ளச் சாராயம் மீட்கப்பட்டு விழுப்புரத்தில் உள்ள தடய அறிவியல் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது.

சோதனையில், சாராயத்தில் மெத்தனால் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.

இந்தச் சூழலில், கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோர் இன்னும் யாரேனும் சிகிச்சைக்கு வராமல் இருக்கின்றனரா என்பது குறித்து வீடுவீடாகச் சென்று சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே புதிய மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள எம்.எஸ்.பிரசாந்த், கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

கள்ளச்சாராய சம்பவத்தைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகரில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்