சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 35 பேருக்கும் மேலானோர் உயிரிழந்துள்ள சம்பவம் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி பலர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.
“உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலம்பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
“கடந்த ஆண்டு இதேபோன்ற சம்பவம் காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது,” என்று தெரிவித்துள்ளார்.

