கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்ததில் 37 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் ஐவர் பெண்கள். 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த கூலித் தொழிலாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை இறந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கில் ஏறத்தாழ 500 பேர் பங்கேற்றனர். அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் விற்பனையான கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்தனர்.
இறுதிச்சடங்கு முடிந்து வீடு திரும்பியவர்களுக்கு பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டன. சிலர் அன்று இரவே மருத்துவமனைகளுக்குச் சென்றனர். அதனைத் தொடர்ந்து மரணச் செய்திகள் வெளிவரத் தொடங்கின.
அதிகாலையில் சிலர் வீட்டிலும் சிலர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.
கிட்டத்தட்ட 120 பேர் வாந்தி, மயக்கம், தலைவலி,நெஞ்சுவலி, மங்கலான பார்வை போன்ற பல்வேறு பிரச்சினைகளுடன் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், ஜிப்மர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
வியாழக்கிழமை (ஜூன் 20) பிற்பகல் நிலவரப்படி அவர்களில் 37 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிகிச்சை பெறுவோரில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவம் தொடர்பில் கள்ளச்சாராய வியாபாரிகள் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தாமோதரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தச் சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது கண்டறியப்பட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கள்ளச்சாராய சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், சிபி-சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்க அவர் உத்தரவிட்டார். இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும் என்று ஸ்டாலின் கூறினார்.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜதாவத் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், காவல்துறை கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா உள்ளிட்ட 10 காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
கருணாபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 20 சடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

