சென்னை: கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக மக்களின் உயிரிழப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இதுபோன்ற தருணங்களில் மக்களுக்குப் பக்கபலமாக நடிகர்கள் துணை நிற்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளச்சாராய உயிரிழப்பால் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனை, வீடுகள், சாலைகளில் கதறியழும் காட்சிகள் கண்களைக் குளமாக்குகிறது. இவ்வளவு நடந்த பிறகும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை.
“நடிகர் விஜய் மட்டும் இடர் ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் குரல் கொடுத்துள்ளார். மற்ற அனைவரும் யாரைக் கண்டு அஞ்சுகிறீர்கள்?” எனக் கேட்டுள்ளார் ஜெயக்குமார்.
“ஏழை, எளிய மக்கள் ரூ.200 கொடுத்து டிக்கெட் வாங்குவதால்தான் நீங்கள் ரூ.100 கோடி, ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுபோன்ற நேரங்களில் உங்களது ஆதரவைக் கொடுக்கவேண்டிய சமூகப் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் உள்ளது.
“மானத் தமிழன் மாண்டுபோவதை திரைத்துறையினர் வேடிக்கை பார்த்தால் அதனை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்,” என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

