திருச்சி: தமிழகத்தில் நேரடியாக வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்ய மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் இதற்கு தமிழகம் முழுவதும் 30,000 பேர் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 500 வீடுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக இணைப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கப்படுகிறது.
இதனால் எரிவாயு விநியோகச் செலவு 20 விழுக்காடு குறைகிறது என்பதுடன் சுற்றுச்சூழலையும் பாதிப்பதில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழகத்தில் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 2.30 கோடி வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் டொரண்ட் நிறுவனத்திற்கு இயற்கை எரிவாயு இணைப்புக்காக 5000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றுள் முதற்கட்டமாக 500 வீடுகளில் இயற்கை எரிவாயு இணைப்பு ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்த இணைப்புக்காக பதிவு செய்வோருக்கு ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளன.

