சென்னை: தமிழக அரசு தங்களை எதிர்த்துப் பேசுபவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு பழிவாங்க காவல்துறையை பயன்படுத்துவதாக அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
பொய் வழக்குப் போடுவதில் கவனம் செலுத்திய தமிழக அரசு, அந்தக் கவனத்தை கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் காட்டவில்லை என அவர் சாடியுள்ளார்.
கள்ளச் சாராய சாவுகளுக்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் கள்ளச்சாராய சம்பவம் தமிழக அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான கார்த்தி என்பவர் ஒரு லட்ச ரூபாய் மோசடி வழக்கில் கைதானார். அச்சமயம் அவர் சவுக்கு சங்கரின் அலுவலகத்தில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் சவுக்கு சங்கர் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பணமோசடி வழக்கில் ஆலங்குடி நீதிமன்றம் சொந்த பிணை வழங்கியுள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து கிளம்பிய சங்கர், செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்குப் பதில் அளித்த சங்கர், தமிழக அரசு பொய் வழக்குகளைப் போடுவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.