தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கள்ளச் சாராய மரணங்கள்: நடிகர் சூர்யா ஆட்சி நிர்வாகத்துக்குக் கடும் கண்டனம்

2 mins read
fe987acf-7ea3-447d-9ff7-8ceb29e55c90
கள்ளச்சாராயத்தால் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் மனதை நடுங்கச் செய்கிறது என்கிறார் சூர்யா. - படம்: ஊடகம்

சென்னை: இயற்கைப் பேரிடர் காலத்தில்கூட ஒரு சிற்றூரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்த துயரம் நடந்திராது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும் பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது என்று நடிகர் சூர்யா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கள்ளச் சாராயத்திற்கு அன்பிற்குரியவர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்லிவிடமுடியும்? இப்போது அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஊடகங்கள், மக்கள் என அனைத்து தரப்பினரின் கவனமும், கவலையும், கோபமும் அதிகரித்திருக்கிறது.

அரசாங்கமும் ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால் நீண்ட காலப் பிரச்சினைக்கு குறுகிய காலத் தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை ஒருபோதும் பலனளிக்காது.

கடந்த 2023ஆம் ஆண்டிலும் இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை குடித்து 22 பேர் பலியானர்கள்.

அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில் அதே மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்து கொத்துக் கொத்தாக மக்கள் பலியாகிவிட்டனர். ஆனால், இப்போதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்க முடியும். குறுகிய கால தீர்வை கடந்து தமிழக முதல்வர் மதுவிலக்குக் கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார் என மக்களோடு சேர்ந்து நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

சட்ட விரோத கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு கடும் கண்டனம். பலியான உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிரார்த்தனை. இனி ஒரு விதி செய்வோம். அதை எந்நாளும் காப்போம்,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்