கள்ளக்குறிச்சி: சிபிஐ விசாரணை கோரும் எதிர்க்கட்சிகள்

2 mins read
03657da3-0cbf-4c16-bdbb-88f68a8d05d8
கள்ளச் சாராயம் குடித்து பலியானோரின் குடும்பத்தாருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நேரில் சென்று ஆறுதல் கூறினார். - படம்: ஊடகம்

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி, பலியானோர் எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை கோரி உள்ளன.

இதனிடையே, கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்துள்ள துயரம் மிகுந்த சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க அரசு தயங்காது என சட்டப்பேரவையில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற விவாதங்களின்போது, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, அவையில் குழப்பம் நிலவியது.

எனவே, அதிமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதன்படி, அதிமுக எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். மேலும், பாஜக, பாமக உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நெஞ்சை பதற வைக்கக்கூடிய, மக்களை கொதிப்படைய வைத்துள்ள இந்த துயரச் சம்பவம் குறித்துக்கூட சட்டமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் சட்டமன்ற உறுப்பினரானதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும் என்றார்.

“சட்டப்பேரவையில் நியாயம் கிடைக்கவில்லை. பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்பட்டிருக்க வேண்டும்.

“உண்மையை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,” என்றார் எடப்பாடி பழனிசாமி.

சிபிஐ விசாரணை தேவை என பாமக உள்ளிட்ட சில கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்தி உள்ளன.

இதற்கிடையே, கள்ளச்சாராயம் தயாரிக்க ஆந்திரா, புதுவையில் இருந்து எத்தனாலும் சில வேதிப்பொருள்களும் கொண்டுவரப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்தத் துயரச் சம்பவத்திற்கு காரணமான நான்கு பேர் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 164 நபர்களில் 117 நபர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 52 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கோவிந்த ராஜ் என்ற கன்னுக்குட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் மூவரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று முதல்வர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்