சென்னை: தமிழ்நாட்டில் 55 உயிர்களைப் பலி வாங்கியுள்ள கள்ளச்சாராயச் சாவுகளுக்குக் காரணமான மெத்தனால், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை இந்தக் கள்ளச்சாராய வழக்குகளில் சிக்கியவர்கள், தொடர்புடையவர்களிடம் காவலர்கள் நடத்திய விசாரணையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இருந்து ரயில் மூலம் மெத்தனாலை கடத்தி வந்ததாகத் தெரியவந்துள்ளது.
முதலில் மெத்தனால் ரசாயனம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர் அங்கிருந்து யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பதுக்கி வைக்கப்பட்டு, இதர மாவட்டங்களுக்குக் கள்ளத்தனமாக விநியோகிக்கப்படுமாம்.
இந்த மெத்தனால் ரசாயனம் கலக்காமல் இருந்திருந்தால் இத்தனை மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கள்ளச்சாராயம் அருந்திய மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், அவர்களது இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்தவர்களும் அங்கு விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், கருணாபுரம் கிராமத்தின் ஒரே தெருவில் 12க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தொடர்ந்து கருணாபுரத்துக்குச் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

