கள்ளக்குறிச்சியில் 7 பேர் கைது: பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்தது

கள்ளக்குறிச்சியில் 7 பேர் கைது: பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்தது

2 mins read
169978cb-9760-4724-9c58-81e9e18204ed
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். - படம்: இந்திய ஊடகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ல் இருந்து 53 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் கூறுகையில், “கள்ளச்சாராயம் அருந்திய 193 பேரில் 140 பேரின் உடல்நிலை தற்போது பாதுகாப்பாக உள்ளது. அவர்களில் சிலருக்கு பிராணவாயு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை ​53 பேர் உயிரிழந்துள்ளனர்,” என்று கூறினார்.

“இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகக் காவல்துறையின் சிபிஐ சிஐடி கிளைக்கு வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

“ஆரம்பக் கட்டத்தில் சிறப்பு மருத்துவர்கள் குவிக்கப்பட்டனர். ஏறக்குறைய 56 மருத்துவர்கள் பல்வேறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்தும் வரவழைக்கப்பட்டனர். சுவாசக் கோளாறு இருந்த பல நோயாளிகளும் குணமடைந்துள்ளனர்,” என்று கள்ளக்குறிச்சி ஆட்சியர் தெரிவித்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், அங்கிருந்த மக்களிடம் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், சட்டவிரோத மதுபானம் அருந்தமாட்டோம் என உறுதிமொழி எடுக்க வைத்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி பேரிடரில் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையோ இழந்த குழந்தைகளின் கல்வி மற்றும் விடுதி செலவு முழுவதையும் மாநில அரசே ஏற்கும் என்றார்.

கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பியதால் தமிழக சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது.

மூவர் மீது கொலை வழக்குப் பதிவு

கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்தது தொடர்பில் மூவர்மீது கொலை வழக்கைப் பதிவு செய்து காவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ராமர், சின்னதுரை, ஜோசப்ராஜா ஆகியோர் மீது கச்சிராப்பாளையம் காவல்நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்