சென்னை: நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவன் ஒருவன் சாகசம் செய்துகாட்டுவதற்கு முனைந்தபோது, அவரது கையில் தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடந்த சம்பவம் குறித்து பலரும் வலைத்தளங்களில் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் துவங்கி, அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய், சனிக்கிழமை (ஜூன் 22) தனது 50வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்.
கள்ளச்சாராய உயிரிழப்பு காரணமாக, தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு விஜய் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதையும் மீறி சிலர் கொண்டாடினர்.
சென்னை நீலாங்கரையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் பல்வேறு சாகசங்களைச் செய்துகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சிறுவன் ஒருவன் கையில் தீயைப் பற்ற வைத்து ஓட்டை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவனின் கை முழுவதும் தீ பரவியது. தீயை அணைப்பதற்காக அருகில் இருந்தவர்கள் தண்ணீர் என நினைத்து பெட்ரோலை எடுத்து அச்சிறுவன் மீது ஊற்றியதில் தீ மளமளவென பரவியது.
அதன்பின்னர், தீயை அணைத்து அச்சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் விஜய் கட்சியின் நிர்வாகி ஒருவருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

