கள்ளக்குறிச்சி: குறைந்தது 54 பேர் உயிரிழப்பு, 10 பேரின் பார்வை பறிபோனது

1 mins read
7b742a0e-9570-4269-a75f-fd21b3fb2b45
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். - படம்: ஊடகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தது 54ஆக அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, 144 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை, முக்கியக் குற்றவாளியான சின்னத்துரை உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மூன்று பேர் மீது கொலை வழக்குப் பதிவாகி உள்ளதாகவும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சிகிச்சையில் இருந்து வரும் 10 பேருக்குக் கண்பார்வை பறிபோன தகவலை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கைதானவர்களில் மதன்குமார் என்பவர், கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் எரிசாராயம் அருந்தி 27 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்.

இதற்கிடையே, கள்ளச்சாராயம் அருந்தியதால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அக்குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக செலுத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்