சென்னை: நீட் தேர்வைக் கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாடத்தை தள்ளி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின்போது சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை எதிரொலித்தது. அப்போது நடப்பாண்டில் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திமுக மாணவர் அணி சார்பில் ஜூன் 24ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
எனினும், அந்த ஆர்ப்பாட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக திமுக மாணவர் அணி தெரிவித்துள்ளது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

