சென்னை: நாடு முழுவதும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
கடைசி நேர அறிவிப்பால் தொலைதூர மையங்களுக்குத் தேர்வெழுதச் சென்ற தேர்வர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். நாடு முழுவதும் ஏழு தேர்வு நிலையங்களில் 1,563 பேர் இந்தத் தேர்வுக்காகத் தயாராகி இருந்தனர்.
இந்நிலையில், மருத்துவ மாணவர்களுக்கான தேர்வு வாரியத்தின் நடைமுறைகள் குறித்து முழுமையான ஆய்வு மதிப்பீடு செய்யப்படும் என்றும், இதற்காக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் தகுதிக்கான அளவுகோல் எனப் பொய்வேடம் தரித்த நீட் தேர்வு ஒரு மோசடி என்பதையும், ‘மாணவர்களுக்கு எதிரான சமூகநீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான’ இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் மோசடிகளையும் கண்டித்ததோடு, நீட் தேர்வு முறையை ஆதரிப்பதை ஒன்றிய அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையைக் கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுபோன்ற தேர்வுமுறையைத் தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி இதுகுறித்து வெளியிட்ட கருத்தில், “இந்தியா முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலனையும், மனநிலையையும் சிறிதும் உணர்ந்து கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது முதலே அதில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் அதை போக்க முடியவில்லை. எனவே நீட் தேர்வு சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று திரு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

