சென்னை: தமிழகத்தில் 61 நாள்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு, கடந்த 14ஆம் தேதி முடிவடைந்தது. அன்றிரவு காசிமேட்டில் இருந்து விசைப்படகுகளுடன் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்த நிலையில் மீன்பிடிக்க நடைமுறையில் இருந்த தடை காலம் முடிந்து இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஏராளமான மீன்பிடிப் படகுகள் கரைக்குத் திரும்பத் தொடங்கின. அதையடுத்து காசிமேடு மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான வாடிக்கையாளர்கள் கூடினர்.
காசிமேட்டில் வஞ்சிரம், வவ்வால், கடமா, இறால் உள்ளிட்ட மீன்கள் அதிகமாக காணப்பட்டன. இதனால் மீன்களின் விலையும் கடந்த வாரத்தை விட ரூ.50 முதல் ரூ.200 வரை குறைவாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் உற்சாகமாகக் காணப்பட்டனர்.

