மதுரை: இந்தியாவின் வடமாநிலங்களில் இயக்கப்படும் ரயில்களில் புத்தம்புது நவீன பெட்டிகளும் தமிழக ரயில்களில் ஓட்டை உடைசல் பெட்டிகளும் பொருத்தப்படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மின்னிலக்க முறை அமலில் இல்லை. இதனால் மாற்றுத் திறனாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறோம்,” என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “மாற்றுத் திறனாளிகள் அடையாளங்களை இணையத்தில் சரிபார்க்கும் நடைமுறையை மதுரை, திருச்சி, சேலம் ரயில் நிலையங்களில் ஏன் அமல்படுத்தவில்லை?
“பல ரயில்களில் பயணிகளுக்கான சேவை படுமோசமாக உள்ளது. ரயில் பெட்டிகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை,” என்றனர்.
மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “பெரும்பாலான ரயில்களில் பழைய பெட்டிகள் அகற்றப்பட்டு புதிய, நவீனப் பெட்டிகள் பொருத்தப்பட்டு வருகின்றன,” என்றார்.
அதற்கு நீதிபதிகள், “வடமாநிலங்களில்தான் ரயில்களில் புதிய பெட்டிகள் பொருத்தப்படுகின்றன. தமிழகத்தில் இயங்கும் ரயில்களில் ஓட்டை உடைசல் பெட்டிகள்தான் உள்ளன.
“கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டாலும் ரயில்கள் முறையாகப் பராமரிக்கப்படுவது இல்லை. இந்த நிலை மாற வேண்டும்,” என்றனர்.

