கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ள 17 ஆயிரம் பேர் மீது நடவடிக்கை

1 mins read
1d94fb7f-97a0-4f84-b36e-dc3292b5bc76
கோவிலுக்குச் சொந்தமான நிலம் என்ற அறிவிப்புப் பலகை வைக்க பல கோவில் நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ள 17,450 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோவில்கள் பாதுகாப்புப் புனரமைப்பு தொடர்பாக தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

கோவில் வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வரும் நிலையில், தமிழக அரசுக்கு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட 75 உத்தரவுகளின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

தமிழக கோவில் சொத்துகள் தொடர்பாக கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இதுவரை 351 கோவில்களில் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், நான்கு பறக்கும் படைகள் 179 கோவில்களில் ஆய்வுகள் மேற்கொண்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

“மாநிலம் முழுவதும் உள்ள 17,962 கோவில்களில் நகைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

“கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்கள் 17,450 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தமிழகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான சிலைகள் காணாமல் போயின என்றும் 273 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும், கோவில் சிலைகளைப் பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள 73 சிறப்பு மையங்களில் 8,693 சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

கோவில் சிலைகள் திருட்டுப்போனது, சொத்துகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களில் 111 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்