மதுக்கடைகளை மூடச் சொல்வது தவறு; குடிக்காதே என்று சொல்ல முடியாது: கமல்ஹாசன்

1 mins read
cfd195d6-d5d4-43d7-aa7e-e88ef12f79d0
கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து நலம் விசாரித்தார். - படம்: தமிழக ஊடகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், கள்ளச் சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23)நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “டாஸ்மாக் அருகிலேயே விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும்,” என்று சொன்னார்.

மேலும் அவர் கூறுகையில், “குடிக்காதே என்று சொல்ல முடியாது; அளவோடு குடி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

“மதுக்கடைகளை இழுத்து மூடவேண்டும் என்பது தவறான கருத்து. இதற்கு உலகத்தில் பல முன்னுதாரணங்கள் உள்ளன. வருமானம் ஈட்டும் எந்த அரசும் அதை திரும்பவும் மக்களுக்கு போய்ச்சேரும் ஒரு நற்பயனை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

“விஷச் சாராயம், கள்ளச்சாராயம், மது உள்ளிட்டவை ஆபத்து என்பதை மக்களின் மனதில் படும்படி எடுத்துச்சொல்லும் அறிவுரைகள் அளிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்