சென்னை: தமிழகத்தில் வேலை பார்த்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என தமிழக தொழிலாளர் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி, இதுவரை 8.37 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பெயரைப் பதிவு செய்துள்ளதாகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது அவர் சில விளக்கங்களை அளித்தார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான கொள்கைகளை வகுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்த அமைச்சர் கணேசன், தமிழகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்துவிதமான உதவிகளும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் இறந்தால் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரும் அரசு இணையத்தளத்தில் தங்களுடைய பெயரைப் பதிவு செய்வது அவசியம் என்றார்.
தொழிலாளர் நல அலுவலகங்களில் இதுவரை 8.37 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர் என்றார் அமைச்சர்.

