மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது மத்திய அரசு: தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது மத்திய அரசு: தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

2 mins read
d1fb8922-e26e-4fee-a6de-08a572b19d56
தங்கம் தென்னரசு. - படம்: ஊடகம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

எனினும் திட்ட முதலீட்டு வாரியம் பரிந்துரைத்த நிலையில், மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவினர் ஒப்புதல் அளிக்கவில்லை என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் நிதித்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெரிய அளவிலான உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என்று திரு.தங்கம் தென்னரசு விமர்சித்தார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அனைத்து செலவுகளையும் மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனால் மாநில அரசுக்கு கடும் நிதிச்சுமை ஏற்படுவதாகவும் இது போன்ற திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த கையோடு மத்திய நிதி நிலை அறிக்கையில் போதிய நிதியும் ஒதுக்கப்பட வேண்டும் என்றார் தங்கம் தென்னரசு.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி தமிழக அரசுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு நிறுத்தியதாக குறிப்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, இதனால் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ரூ.20,000 கோடி வருவாய் குறைவு ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார்.

பல்வேறு திட்டங்களுக்கான மத்திய அரசின் ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லாத நிலையில், செலவீனங்களின் பெரும் பகுதியை மாநில அரசு ஏற்க வேண்டிய கட்டாயம் நிலவுவதாக தங்கம் தென்னரசு கூறினார்.

குறிப்புச் சொற்கள்