சென்னை: தமிழக நகர்ப்புறங்களில் நிலம் வைத்துள்ள ஏழை மக்கள் தனி வீடு கட்டிக்கொள்ள மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய வீட்டு வசதித்துறை அமைச்சர் அன்பரசன், ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டிக்கொள்வதற்கு இந்த மானியம் வழங்கப்படும் என்றார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் ரூ.70 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர்.
“மேலும் நகர்ப்புறப் பகுதிகளில் நில உரிமையுடைய நலிவுற்ற மக்கள் தாமாக வீடு கட்டிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் மாநகரங்கள், நகரங்கள், பேரூராட்சிகளில் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டிக் கொள்ள மானியம் வழங்கப்படும்.
“இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கடைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும். வாரிய திட்டப்பகுதிகளில் வசிக்கும் விளையாட்டில் ஆர்வம் உள்ள இளையர்களைக் கண்டறிந்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்,” என்று தமிழக அரசு மேலும் தெரிவித்துள்ளது.


