சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை அடுத்து, பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும், விஜய் அரசியல் களம்கண்ட பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது என்பதால் அவரது அறிவுறுத்தலையும் மீறி, தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்கள் பிறந்தநாளைக் கொண்டாடினர். குறிப்பாக அன்ன தானம், உடல் உறுப்பு தானம் செய்துள்ள ரசிகர்களுக்கு மற்ற அரசியல் கட்சியினரும்கூட வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தவெக கழகத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்டோர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இத்தகைய நல்லெண்ண நடவடிக்கைகள் மூலம் அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலின்போது விஜய் கட்சியை தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ள முடியும் என சில அரசியல் கட்சிகள் கணக்கு போட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, விஜய் பிறந்த நாளையொட்டி மதுரையில் உள்ள ஆதரவற்ற நாய்களுக்கு விஜய் ரசிகர்கள் பிரியாணி விருந்து படைத்து மகிழ்ந்தனர்.
விழாவில் காயமடைந்த சிறுவன்
சென்னையில் சிறப்பு சாகச நிகழ்ச்சிகளுக்கு அவரது ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல்வேறு சாகசங்களைச் செய்துகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சிறுவன் ஒருவன் கையில் தீயைப் பற்ற வைத்து ஓட்டை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவனின் கை முழுவதும் தீ பரவியது. தீயை அணைப்பதற்காக அருகில் இருந்தவர்கள் தண்ணீர் என நினைத்து பெட்ரோலை எடுத்து அச்சிறுவன் மீது ஊற்றியதில் தீ மளமளவென பரவியது. அச்சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

