கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பலர் கடந்த 18, 19ஆம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். புதன்கிழமை (ஜூன் 26) மேலும் நால்வர் உயிரிழிந்ததையடுத்து பலி எண்ணிக்கை 63 ஆகி உள்ளது.
15க்கும் மேற்பட்டவர்கள் கண் பார்வையை முழுமையாக இழந்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 93 பேர் முழு உடல்நலத்துடன் வீடு திரும்பியுள்ளனர். 69 பேர் சிகிச்சையில் உள்ளனர் என கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து முதலில் 3 பேரல்கள் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்பிறகு 1800 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 19 வயதான மாதேஷ் என்பவர் இந்தக் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது குறித்தும் விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர், மாதேஷ் உள்ளிட்ட ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர்.
இதற்கிடையே, பெங்களூரில் பதுங்கி இருந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே, அக்கராயப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரியான சாமுண்டி பெங்களூரில் தலைமறைவாக இருந்தது தெரிய வந்ததால், அங்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தனது வீட்டின் பின்புறத்தில் இரண்டு லாரி டியூப்பில் 110 லிட்டர் சாராயத்தை சாமுண்டி பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. அவற்றை காவல்துறையினர் கொட்டி அழித்தனர்.