‘அதிகாரிகளே குற்றவாளிகள்’

கள்ளக்குறிச்சியில் பலி எண்ணிக்கை உயர்வு; குஷ்பு ஆய்வு

‘அதிகாரிகளே குற்றவாளிகள்’

2 mins read
38814bc0-8217-4c39-8f32-a071777f583d
தேசிய மகளிர் ஆணையம் சார்பில், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆய்வுசெய்த நடிகை குஷ்பு. - படம்: தமிழக ஊடகம்

கள்ளக்குறிச்சி: தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்துப் பலர் மாண்ட விவகாரத்தில் அதிகாரிகள்தான் குற்றவாளிகள் என்று நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பில் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.

மாண்டோரில் அறுவர் பெண்கள் என்பதால், அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள குஷ்பு தலைமையில் மூவர் அடங்கிய விசாரணைக் குழுவை மகளிர் ஆணையம் அமைத்துள்ளது.

இதையடுத்து, குஷ்பு தலைமையிலான குழுவினர் புதன்கிழமை (ஜூன் 16) கள்ளக்குறிச்சி கருணாபுரத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்கள் ஆறுதல் கூறினர்.

ஆய்வை முடித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, “கள்ளச்சாராயம் குடித்த சிலருக்குப் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டறிய வேண்டும்.

நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் பல இடங்களில் தவறு நடந்துள்ளது தெரியவந்தது. இங்குள்ள அதிகாரிகள் அது தெரிந்திருந்தும் தெரியாததுபோல நடந்துள்ளனர். அதுதான் மிகப் பெரிய குற்றம். அவர்கள்தான் குற்றவாளிகள். இதுபற்றி டெல்லி மகளிர் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம்,” என்று சொன்னார்.

இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றாதது ஏன் எனத் தெரியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், அப்பகுதியில் கள்ளச்சாராயம் எளிதாகக் கிடைத்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

உயிரிழப்பு 63 ஆனது

இதனிடையே, கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே பெங்களூரில் பதுங்கி இருந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரி சாமுண்டி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தனது வீட்டின் பின்புறத்தில் 110 லிட்டர் சாராயத்தை சாமுண்டி பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. அவற்றைக் காவல்துறையினர் கொட்டி அழித்தனர்.

குறிப்புச் சொற்கள்