தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓசூரில் 2,000 ஏக்கரில் அனைத்துலக விமான நிலையம் : முதல்வர் ஸ்டாலின்

2 mins read
3c42da7c-f5ce-4c0e-abb4-59ce48e1fbbd
கோப்புப்படம் - ஊடகம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 2,000 ஏக்கரில் அனைத்துலக விமானநிலையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகச் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஜூன் 27) அறிவித்தார்.

இந்தச் செய்தி ஓசூர் சுற்றுவட்டார மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழகச் சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வரும் சூழலில், முதல்வர் ஸ்டாலின் இரு புதிய திட்டங்களை அறிவித்தார்.

“2000 ஏக்கரில் ஓசூரில் பன்னாட்டு விமானநிலையம் அமைக்கப்படும். இதன்மூலம் ஆண்டுக்கு மூன்று கோடிக்கும் மேலான பயணிகளால் பயன்பெற முடியும்.

“அதுபோல் கோவையில் கலைஞர் நூலகக் கட்டுமானப் பணிகளும் திருச்சியில் கலைஞர் நூலகமும் தொடங்கப்படும்,” என்றும் அறிவித்தார்.

இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக முன்னேறி இருப்பதாகவும் பொருளியலில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்த ஸ்டாலின், தொழில் நிறுவனங்களின் வருகையால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

மின்வாகன உற்பத்தித் துறையில் ஓசூர் வளர்ந்து வருவதாகவும் கூறிய ஸ்டாலின், கோயம்புத்தூர் மக்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் பயன்படும் விதமாக கலைஞர் நூலகக் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும் என்றும் இதேபோல் சேலத்தில் நூலகம், அறிவு சார்ந்த மையம் அமைப்பது தொடர்பாக வரும் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திருச்சி மாநகரிலும் உலகத்தரம் வாய்ந்த நூலகம் கலைஞர் கருணாநிதி பெயரில் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

ஓசூரில் அனைத்துலக விமான நிலையம் அமைக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு திமுக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் தொழில்களைப் பரவலாக உருவாக்கி வருகிறோம். இதில் மின்னணு, மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது.

இப்படி வேகமாக வளர்ந்து வரும் ஓசூர் நகரத்தினை தமிழ்நாட்டின் முக்கிய பொருளியல் வளர்ச்சி மையமாக உருவாக்குவதற்காக அங்கு நவீன உட்கட்டமைப்பு வசதிகளை அமைக்கும் நோக்கில் பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களைத் தமிழக அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், ஓசூர் நகரத்திற்கான ஒரு புதிய பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு, அது முடிவடையும் தருவாயில் உள்ளது.

இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு குறித்து விமர்சித்துள்ளார்.

ரூ.30 கோடி செலவில் ஒசூர் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் வெறும் விளம்பரத்துக்காக ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று மீண்டும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்