சென்னை: தமிழகத்தில் உள்ள பல கோவில்களிலும் அன்னதானத் திட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், புதிதாக கள்ளழகர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
தமிழகச் சட்டப்பேரவையில் புதன்கிழமை மாலை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 108 புதிய அறிவிப்புகளை அந்தத் துறையின் அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.
“ஒருகால பூசை திட்டத்தின்கீழ் பயன்பெறும் 17,000 திருக்கோவில்களின் வைப்புத் தொகை இரண்டு லட்சத்திலிருந்து இரண்டரை லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
“ஏற்கெனவே 17,000 கோவில் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகையாக வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய், இவ்வாண்டு முதல் கூடுதலாக மேலும் 1,000 கோவில்களின் அர்ச்சகர்களுக்கும் வழங்கப்படும்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,100 இணைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், வரும் ஆண்டில் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கப்படும் என்றும் கூறியவர், தமிழ்நாட்டில் ஆன்மிகத்தை அரசியலாக்கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும் என்றார்.

