தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிள்ளையார்பட்டி வங்கியில் பேரளவு மோசடி

2 mins read
9fd37e2d-7b66-497b-895d-b92e4077ad65
மோசடி செய்ததாக நம்பப்படும் வங்கியின் முன்பு கூடிய மக்கள். - படம்: மாலை மலர்

திருப்பத்தூர்: பிள்ளையார்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் பேரளவு மோசடி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட அந்த வங்கியில் சுற்றுவட்டார கிராமங்களான குன்றக்குடி, நேமம், அரிபுரம், கே.ஆத்தங்குடி, வைரவன்பட்டி, சிறுகூடல் பட்டி, என்.புதூர், மாங்கொம்பு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

குறிப்பாக தங்களது தங்க நகைகளை இந்த வங்கிக் கிளையில் அடகு வைத்து பணம் பெற்றுச் செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேமம் கிராமத்தைச் சேர்ந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் தான் அடகு வைத்த நகையை பிள்ளையார்பட்டி வங்கிக் கிளையில் இருந்து மீட்டுச் சென்றார்.

வீட்டிற்குச் சென்ற அவர் நகையை அணிந்து பார்த்த போது நான்கு கிராம் எடை குறைந்து இருப்பது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து வங்கிக் கிளையில் கேட்டபோது, பணியில் இருந்த அதிகாரிகள் யாரும் சரிவர பதில் அளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

அந்த வாடிக்கையாளர் இது குறித்து நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சுற்றுப்புற கிராம மக்கள் அனைவரும் வங்கி முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் தங்கள் அடகு வைத்த நகையை எடை சரிபார்ப்பு மற்றும் மீட்பதற்காக வந்தபோது அனைவரது நகைகளிலும் இரண்டு கிராம் முதல் 8 கிராம் வரையிலான எடை குறைந்து இருப்பது வாடிக்கையாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.

இதனால் பிள்ளையார்பட்டி வங்கிக் கிளை முன்பு தகவல் அறிந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக மாலை மலர் தெரிவித்தது.

தாங்கள் நகையை அடகு வைக்கும் போது வங்கியில் எழுதி தரப்பட்டிருக்கும் எடைக்கும், மீட்டுக் கொண்டு வந்த பிறகு சரிபார்க்கும் போது உள்ள எடைக்கும் எட்டு கிராம் வரையில் குறைவாக வித்தியாசம் காணப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து வங்கிக் கிளையின் மூத்த மேலாளரிடம் கேட்ட போது, அனைத்து வாடிக்கையாளர்களின் நகை எடை குறைவது சம்பந்தமாக கணக்கீடுகள் நடைபெற்று வருவதாகவும், காவல்துறையில் முறையாக புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், மண்டல அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து சிறப்பு அதிகாரிகள் குழு வங்கிக்கு வருகை தர இருப்பதாகவும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்