சென்னை: மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடமிருந்து பறிக்கும் வகையில் நீட் தேர்வுமுறை அமைந்துள்ளகு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
“நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து பள்ளிக்கல்வியில் மாணவர்கள் பெறும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்த சட்டமன்றப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டும்,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதையடுத்து இத்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின்போது அரங்கேறியுள்ள சம்பவங்கள், போட்டித் தேர்வுகள் மீது நமது மாணவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிலைகுலையச் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
இதுவரை இருந்திராத அளவுக்கு, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது. தேர்வுகள் காலதாமதமாகத் தொடங்கியதாகக் காரணம் காட்டி, விதிகளில் இல்லாத முறையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது, இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால், கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு நடத்தப்பட்டது ஆகியவை மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியானதாக வந்த தகவல்கள், தேர்வு மையத்தில் தேர்வு மைய கண்காணிப்பாளரே, விடைத்தாள்களை நிரப்பி முறைகேடு புரிந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகள், பல ஆண்டு காலம் உழைத்து, செலவழித்து இந்தப் போட்டித் தேர்வுக்கு தயாரான மாணவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மேலும் பட்டியலிட்டுள்ளார்.
“இந்த குற்றச்சாட்டுக்களை முற்றிலுமாக மறுத்து தவறே நடைபெறவில்லை என்று கூறிய மத்திய அரசு, பின்பு உச்ச நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய பின்னரே, இந்த தேர்வை நடத்தும் அமைப்பின் தலைவரையே மாற்றியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“தேர்வு முறைகேடுகள் குறித்து எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
“பல ஆண்டுகாலமாக நீட் தேர்வுக்கு எதிராக, தமிழகமும், தமிழக மக்களும் தனியே போர்த் தொடுத்து வந்த நிலையில், நீட் தேர்வின் உண்மையான அவலங்களை உணர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது,” என முதல்வர மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தின் குரல், இந்தியாவின் குரலாக எதிரொலிப்பதை அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உத்திரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் என பலரும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர் என்றும் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.

