விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆலைகளில் ஒன்றில் சனிக்கிழமை காலை திடீரென வெடிகள் வெடித்துச் சிதறி, தீ பரவியதை அடுத்து சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அத்துடன், பட்டாசு ஆலைக்குள் யாரும் சிக்கியுள்ளனரா எனவும் தேடினர்.
இந்தச் சம்பவத்தில் ஆலையில் வேலை செய்துகொண்டிருந்த நான்கு ஊழியர்கள் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் தீபாவளிப் பண்டிகைக்காக பட்டாசு தயாரிப்புப் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
வெடி விபத்து சம்பவத்தில் மூன்று அறைகள் சேதமாகியுள்ளதாகவும் இன்னும் சிலர் விபத்து நடந்த இடத்தில் சிக்கியிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவித்தன. வருவாய், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.