சென்னை: தற்போதுள்ள சூழலில் தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை என நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலுக்கு மட்டுமல்லாமல் அனைத்துத் துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பது ஒரு தந்தை என்ற முறையில் தமக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் நண்பர்கள் யாராவது தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் நல்ல மாணவர்கள் அவர்களைத் திருத்த வேண்டும் என்றும் திரு.விஜய் கேட்டுக்கொண்டார்.
‘வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது தொடர்கதை அல்ல’ என்று 10,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில்அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்த மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் பேசியபோது விஜய் குறிப்பிட்டார்.
ஜூன் 28ஆம் தேதி (நேற்று) நடைபெற்ற விழாவில் மொத்தம் 800க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து மாணவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் விஜய்.
தமிழகத்தின் நாங்குநேரி பகுதியில் சாதிய ஆதிக்கம் காரணமாக மாணவர் சின்னத்துரை தாக்கப்பட்டார். விருது விழாவுக்கு வந்த அம்மாணவருடன் அமர்ந்து விஜய் முதல் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதையடுத்து மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், நடந்து முடிந்த பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த தம்பி, தங்கைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். மீண்டும் ஒருமுறை எதிர்கால தமிழகத்தின் இளம் மாணவ, மாணவிகளைச் சந்திப்பதில் மகிழ்ச்சியும் நேர்மறை சக்தியும் ஒருசேர கிடைப்பதாக விஜய் தெரிவித்தார்.
“இதுபோன்ற விழாவில் ஒரு சில நல்ல தகவல்களைக் கடந்து வேறு ஏதும் சொல்ல தெரியவில்லை. நீங்கள் எல்லாருமே அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்கிறீர்கள். நீங்கள் என்னவாக வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.
தொடர்புடைய செய்திகள்
“அனைத்து துறையும் நல்ல துறைதான். நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதில் உங்களது முழு ஆர்வத்தை, நூறு விழுக்காடு உழைப்பை கொடுத்தால் வெற்றி நிச்சயம்,” என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார் விஜய்.
மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான துறைகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மாணவர்கள் படிக்கும்போது மறைமுகமாக அரசியலில் ஈடுபடலாம் என்ற குறிப்பிட்ட விஜய், மாணவர்கள் இப்போதைக்குப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மற்றவற்றைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
செய்தி என்பது வேறு, கருத்து என்பது வேறு என்று குறிப்பிட்ட அவர், எது உண்மை, எது பொய் என்பதை ஆராய மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
அப்போதுதான் உண்மையிலேயே நாட்டில் என்ன பிரச்சினை, மக்களுக்கு என்ன பிரச்சினை, சமூக தீமைகள் என்ன என்பதெல்லாம் தெரியவரும் என்றும், அவற்றைத் தெரிந்து கொண்டால் ஒருசில அரசியல் கட்சிகள் செய்கின்ற பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டியிருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
“நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடிய நல்ல விசாலமான உலகப் பார்வை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். அது வந்துவிட்டாலே, அதைவிடச் ஒரு சிறந்த அரசியல் வேறு எதுவுமே இருக்க முடியாது,” என்றார் விஜய்.

