டாஸ்மாக் மதுவில் ‘கிக்’ இல்லை என்று கூறிய அமைச்சர்களுக்குத் தலைவர்கள் கண்டனம்

டாஸ்மாக் மதுவில் ‘கிக்’ இல்லை என்று கூறிய அமைச்சர்களுக்குத் தலைவர்கள் கண்டனம்

2 mins read
5fa93842-b5c2-4705-9c70-8517216ee918
அரசு விற்கும் மதுபானத்தில் ‘கிக்’ இல்லை என்பதால் சிலர் கள்ளச்சாராயத்தை விரும்புகின்றனர் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகிவிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “அரசு விற்கும் மதுபானத்தில் ‘கிக்’ இல்லை. இதனால் சிலர் கள்ளச்சாராயத்தை விரும்புகின்றனர்” எனத் தெரிவித்திருந்தார்.

மற்றோர் அமைச்சர் முத்துசாமி, “தமிழ்நாட்டில் தற்போது பூரண மதுவிலக்குக் கொண்டு வரும் சூழல் இல்லை. ஒரு மதுக்கடையை மூடினால் அடுத்த கடையில் போய் மக்கள் குடிக்கிறார்கள்,” என்றார்.

இவர்களின் பேச்சுக்கு பல கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

பாமக தலைவர் அன்புமணி, “அமைச்சர்களின் கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையும் இவை காட்டுகின்றன. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எந்தச் சூழலும் தேவையில்லை. நாட்டு மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதுமானது. ஆனால், மது ஆலை அதிபர்களின் ஆதரவைபெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை. மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “சட்டப்பேரவையில் டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லை என ஒரு மூத்த அமைச்சர், அதுவும் முதல்வரை வைத்துக்கொண்டே கூறியுள்ளார். மூத்த அமைச்சரின் பதில் கண்டனத்துக்குரியது. டாஸ்மாக் கடைகளில் ‘கிக்’ இல்லை, என்றால் அந்த அளவுத் தரம் இல்லாத ஒரு டாஸ்மாக்கை தமிழக அரசு ஏன் நடத்துகிறது? எனவே தமிழகத்தில் ஏற்பட்ட இத்தனை உயிரிழப்புகளுக்கும் தற்போதைய தமிழக அரசுதான் காரணம் என்பதை அமைச்சர் துரைமுருகன் தன் வாயாலேயே ஒப்புக்கொண்டார்,” என்று தெரிவித்தார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன், “கடந்த சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறிவிட்டு, இன்றைக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு சாத்தியம் இல்லை என அத்துறை அமைச்சர் அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும்,” என்றார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “உழைப்பவர்களின் களைப்பைப் போக்க அவர்களுக்கு மது தேவை எனவும், அரசு விற்கும் மதுபானத்தில் ‘கிக்’ இல்லை என்பதால் கள்ளச் சாராயத்தை நாடிச் செல்வதாகவும் அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது அவருக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் உகந்ததல்ல. தமிழகத்தில் மதுபானக் கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை கொண்டுவர வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்