ஈரோடு உட்பட தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் தீவிரச் சோதனை

ஈரோடு உட்பட தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் தீவிரச் சோதனை

2 mins read
168b047e-44f5-4972-bdc9-c1841a4ef387
தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு உதவும் நபர்களுக்கு என்ஐஏ வலைவீசியது. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

ஈரோடு: தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஈரோட்டில் இரு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) தீவிரச் சோதனை மேற்கொண்டனர்.

‘பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா’ (பி.எப்.ஐ) உள்ளிட்ட எட்டு அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக, கடந்த ஆண்டு அவற்றுக்கு மத்திய அரசு ஐந்து ஆண்டுகள் தடை விதித்தது.

இதையடுத்து தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்த தகவலின் பேரின், தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஞாயிறு அன்று அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். ஈரோட்டில் இரு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஈரோடு பெரியார் நகர் அருகே கருப்பண்ணசாமி கோயில் வீதியில் வசித்து வரும் முகமது இசாக் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கொச்சியில் இருந்து இன்ஸ்பெக்டர் விஜி என்பவர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டனர் என்று இந்து தமிழ் திசை வெளியிட்ட தகவல் தெரிவித்தது.

இரு சக்கர வாகனங்களைப் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு வரும் முகமது இசாக், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் ஈரோடு பூந்துறை ரோடு, அசோக் நகர் 6வது வீதியைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் வீட்டிலும் சோதனை நடந்தது.

சென்னையில் இருந்து காவல்துறை ஆய்வாளர் அமுதா தலைமையில் வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.

முன்னதாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர். சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தச் சோதனை நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்