முதல்வர் ஸ்டாலின் ஏன் அமெரிக்கா செல்கிறார்: மத்திய அமைச்சர் முருகன் கேள்வி

முதல்வர் ஸ்டாலின் ஏன் அமெரிக்கா செல்கிறார்: மத்திய அமைச்சர் முருகன் கேள்வி

1 mins read
a68b8e88-3f6d-400c-ab17-1451c0a776ce
ஸ்பெயின் போன முதல்வர் ஸ்டாலின் ஈர்த்த முதலீடுகளை வெளியிட வேண்டும். - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: முதல்வர் ஸ்டாலின் எதற்காக அமெரிக்கா செல்கிறார் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது, “அமெரிக்கப் பயணம் எதற்கு என்பதை முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். எத்தனை நிறுவனங்களைச் சந்திக்கிறார்கள் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். எத்தனை நிறுவனங்களின் முதலீடுகளை கொண்டு வருகிறார்கள் என்பது தெரியும். அமெரிக்கா சென்று வந்த பிறகு, அவர்களது செயல்பாடுகள் எல்லாம் வெளிப்படையாக அறிவிக்கும்போதுதான், அதன் பயன் நமக்கு தெரியும். ஏற்கெனவே ஸ்பெயின் போன முதல்வர் ஸ்டாலின் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு? ஸ்பெயின் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை முதலில் வெளியிடுங்கள்,” என்று அமைச்சர் முருகன் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். “தமிழக அரசு உடனடியாக வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். கள்ளச்சாராய மரணங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பட்டியலின மக்களுக்கான நலத்திட்டங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்