சென்னை: மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பாதிக்கப்படுவதாக நடிகரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் சத்தியமான உண்மை என்று அவர் குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளைப் பார்க்கும்போது அத்தேர்வின் மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் அறவே போய்விட்டது என்றும் நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் மக்களின் மனநிலை என்றும் விஜய் குறிப்பிட்டார்.
எனவே, இப்பிரச்சினைக்கான ஒரே தீர்வாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள நீட் விலக்கு தீர்மானத்தை தாம் முழு மனதாக வரவேற்பதாக தெரிவித்தார் விஜய்.
“இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்றால் கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும்.
“இதில் சட்ட சிக்கல்கள் இருப்பின் சிறப்பு பொதுப்பட்டியல் ஒன்றை உருவாக்கி அதில் கல்வி, சுகாதாரத்தை இணைக்க வேண்டும். இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்,” என்றார் திரு.விஜய்.
“மத்திய கல்வி நிறுவனங்களுக்குத் தேவை என்றால் நுழைவுத்தேர்வை நடத்திக்கொள்ளட்டும். மாநில வாரியாக கல்வி முறையில் மாற்றம் இருக்கும். அதற்கேற்றபடி பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்,” என்றார் விஜய்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியில் பேசும்போது அவர் மத்திய அரசு பற்றி குறிப்பிடும்போது ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டார்.
“மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் படிக்க வேண்டும். இந்த உலகம் மிகப் பெரியது. வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒன்று போய்விட்டால் பெரிதாக இன்னொன்று கிடைக்கப்போகிறது என்று அர்த்தம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்,” என்றார் விஜய்.

